No results found

    ஜூலை மாதம் முதல் ஜவுளி ஏற்றுமதி சூடுபிடிக்க வாய்ப்பு


    பஞ்சு விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கடைசி 3 மாதங்களில் மேற்கொண்ட தீவிர முயற்சியால் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலையை எட்டியது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதனால் இந்த நிதியாண்டின்(2023-24) துவக்கமும் சவால் நிறைந்ததாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12, 002 கோடி ரூபாயாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 9,929 கோடியாகவும்,கடந்த ஆண்டு மே மாதம் 10, 942 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம் கடந்த மே மாதம் 10, 126 கோடியாகவும் குறைந்துள்ளது.

    அதேசமயம் கொரோனாவுக்கு பிறகு 2021 - 22ல், 8,108 கோடிக்கு நடந்திருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது 10 ஆயிரத்து 176 கோடியாக உயர்ந்துள்ளதே வளர்ச்சிதான். நிதியாண்டின் துவக்கத்தில் 17.19 சதவீதமாக இருந்த சரிவுநிலை 7 சதவீதமாக குறைந்துள்ளது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், அமெரிக்காவில், பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டது.எரிபொருள் விலை உயர்வு சீராகி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவுநிலையில் இருந்து மீண்டு வருகிறது. இம்மாதமும், வர்த்தகம் சற்று உயரும். ஜூலை மாதத்தில் இருந்து மீண்டும் பழைய நிலை திரும்பும். அதற்கு பிறகு ஏற்றுமதி நிறுவனங்கள் பழைய வேகத்தில் இயங்க துவங்கும் என்றார்.

    Previous Next

    نموذج الاتصال